டெல்லி: மும்பையில் தனது வீட்டின் மொட்டை மாடியில் தயாரித்த விமானம் பறப்பதற்கு அனுமதி கிடைத்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விமானி நன்றி தெரிவித்தார். மகாராஷ்டிராவை சேர்ந்த விமான கேப்டன் அமோல் யாதவ் மும்பையின் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். சொந்தமாக விமானம் தயாரிக்க வேண்டும் என்பது தான் அவருடைய லட்சிய கனவு. இதற்காக சுமார் 18 ஆண்டுகள் கடின உழைப்பால் போராடி தனது வீட்டு மொட்டை மாடியில் 6 பேர் அமர்ந்து செல்லும் சிறிய ரக விமானத்தை கிடைத்த பொருட்களை கொண்டு ரூபாய் 4 கோடியில் வடிவமைத்தார். பின்னர் அந்த விமானத்தை பிரித்து கீழே இறங்கி மீண்டும் இணைத்து மேக் இன் இந்தியா திட்ட நிகழ்ச்சியிலும் காட்சிப்படுத்தி அனைவரின் வரவேற்பையும் பெற்றார். ஆனால் விமானத்தை பறக்க வைக்க விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.
அமோல் யாதவின் பிரச்சனைகளை அறிந்த மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனை அடுத்து பிரதமர் மோடி அமோல் யாதவின் திட்டத்துக்கு உதவிகளை செய்யும்ப்படி விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகத்திற்கு அறிவுறுத்தினார். இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அமோல் யாதவின் விமானத்தை சோதனை முறையில் பறக்க வைக்க சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அமோல் யாதவ் தனது கனவை நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவித்தார். அமோல் யாதவின் விமானம் சோதனையில் வெற்றி பெற்றால் தொடர்ந்து பறப்பதற்கு சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
18 ஆண்டுகள் கடின உழைப்பால் வீட்டின் மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானி: பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவிப்பு